மலேசியக் கல்வித் துறையின் கலைத்திட்ட வரலாற்றில் இது வரை நாம் கண்டதையும் அவை நமது அறிவுப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய கடுமையான நேர்வுகளையும் இக்கட்டுரை சுருங்க உரைக்கிறது. தொடர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தரப் போகும் பயன் அல்லது விளைவுகளைச் சிந்திக்கிறது.
அனைத்துலகக் கல்வி நிபுணர்கள், உள்நாட்டு கல்வியாளர்கள் எல்லாரையும் கலந்து கொண்டுதான் இந்தக் கல்விப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது என்று கல்வி அமைச்சர் கூறுகிறார். என்றாலும் கல்வி சார் கலைச்சொற்களின் திரட்சியைத் தவிர எதிர்காலத்திற்கான நம்பிக்கையூட்டும் ஒளி வீச்சுகளை இதில் காண முடியவில்லை.
வேறெங்கோ அல்ல 292 பக்கங்கள் கொண்ட இத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களே இதுவரை வந்து சென்ற கல்வித் திட்டங்களின் தோல்விகளை அடையாளப்படுத்துகின்றன. என்றாலும் தோல்விக்கான காரணங்களைக் காண்பதிலும் அவை இனியும் நேராமல் தடுப்பதற்கான கல்வி நெறி சார்ந்த முடிவுகளையும் கல்வி அமைச்சர் காட்டவில்லை.
மலேசியாவின் பல இனப் பண்பாடுகள், இவை ஏற்படுத்திய நெருக்கடிகள், அரசியல் ஆளுமைக்காக ஒரு குறிப்பிட்ட குழுவினர் நிகழ்த்திய செயல்பாடுகளால் நேர்ந்திருக்கும் சரிவுகள் தனித் தன்மையானவை. இவற்றிலிருந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் திருந்திய சிந்தனையை நாடு வேண்டி நிற்கிறது. ஆனால் கல்வி அமைச்சர் நாட்டுக்கு வெளியே போய் அனைத்துலக அடைவுகளை அளவுகோலாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இந்த அளவுகோல் சுட்டும் அடைவுகளை அடைவதற்கான அறிவு சார் செயல்பாடுகளை அவர் காட்டவில்லை.
முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 13, 2013.